வியாழன், 28 மார்ச், 2013

மரணம்

                மரணம்        
நீங்கள் சாவுரவர்களை பக்கத்தில் இருந்து பார்த்து இருக்கிறிங்களா?
உங்களோடு நீண்ட உரையாடல் செய்தவன் அடுத்த சில நிமிடம்களில் செத்து போனதை பார்த்து இருக்கிறிங்களா?
உங்களுக்கு பக்கத்தில் ஒருவன் நல்ல திடகாத்திரமானவன்,எந்த நோயியும் நொடியும் இல்லாதவன் இன்னும் சரியாக ஐந்து நிமிடத்தில் சாகப்போறான் ஆனால் உங்களால் அவனை எப்படியும் காப்பாற்ற முடியாது .அந்த நிமிடங்களை நீங்கள் அநுபவித்து உள்ளீர்களா?
உங்களுக்கு முன்னால் ஓடி வந்த ஒரு உயிர் ஒன்று அடிபட்டு சாக கிடக்கிறது அவர்களை எந்த வகையிலும் காப்பாற்ற முயற்சி செய்யாமல் நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்றி கொண்டு ஓடி இருக்கிறிங்களா?
எதாவது நடுச்சாமத்தில் எழும்பி உங்கள் உயிர் இருக்கிறதா என நீங்கள் உங்களை செல்வ் செக்கப் பண்ணிணிங்களா?

எனக்கு அதிர்சியை ஏற்படுத்திய முதல் மரணம்
அக்காவின் மரணம்
அவங்கள் எனக்க சித்தி தான்.அம்மாவின் தங்கச்சி.இன்னை வரைக்கும் அவங்கள் என்னில் வைச்ச பாசம் பிரமிக்க வைக்கிற அளவு இருக்கறது.என்னால் நல்லாக சொல்ல முடியும் இன்னை வரைக்கம் அவங்கள் ஒர் அதிசயமான அழகை கொண்டிருந்தாங்கள்.
மற்றது குமார் அண்ணாவின் மரணம் நாங்கள் அவரை சின்ன மாமா எனக் கூறுவோம்.
    malathi balachandran என்பவருடைய அண்ணா அவருடைய வாழ்கையை அவர் சின்ன பையங்கள் எங்களுக்காவே செலவழித்தார்.பாலசுப்பு என்பவருடைய தோட்டத்தில் நாள் முழுக்க தண்ணி கட்டுவார்.அதற்க்கு கூலியாக அவர் வேண்டுவது அந்த தோட்டத்தில் உள்ள தண்ணித் தொட்டியில் புள்ளாக தண்ணியை நிரப்பி விட்டு எங்களை அதற்க்குள் இறக்கி நீச்சல் பழக்கிறது.நாளெல்லாம் தண்ணிக்குள் கிடப்போம் அவர் தோட்டத்துக்குள்ளே தண்ணி கட்டும் போது நாங்கள் எல்லாம் தோட்ட வரம்புகளில் விளையாடுவோம். எப்ப அவர் தண்ணி கட்டி முடிப்பார் என ஆவலோடு காத்துக்கிடப்போம்.அந்த நேரத்தில் எல்லாம் ஏதாவது சாப்பிட தந்து கொண்டே இருப்பார்.பெரும்பாலும் அவர் சாப்பிட தருவது பனம் பிணட்டுத்தான்.அவருடைய அம்மா போடுற பிணாட்டை பாயோடு சுருட்டி சுட்டு எங்களுக்க தருவார்.நல்ல சுரள் தலைமயிர் என்னுடைய பார்வைக்கு சின்னமாமா நடிகர் விஜய் போல இருப்பார்.வாய்கல் வரம்பு தோட்டம் எல்லாம் அவரோடு அலைவோம்.
நிறைய சினிமா படம் பார்ப்பார்.எல்லா படக்கதையும் எங்களை இருத்தி வைச்சு சொல்லுவார்.நான் இன்னைக்கு யோசிக்கின்றேன்.நிச்சயமாக அவருக்கு ஒர தாய் உள்ளம் இருந்த இருக்கிறது.
நிச்சயமாக அவர் இன்னைக்கு இருந்து இருந்த ஒரு பெரிய சமுக சேவகராக இருந்து இருப்பார்.
ரொம்ப சின்ன வயதிலே இறந்து விட்டார்.
இவை இரண்டும் என் கண்ணுக்குள் முன்னால் நடை பெறாத மரணம்.என்றாலும் ஆனாலும் சின்னம் சிறிய வயதில் அது பெரிய இழப்பை அளித்தது
மரணங்கள் எப்பவுமே கடந்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.ஆனாலும் விடாமல் அதை ஒவ்வொரு செக்கனும் நாம் துரத்திக்கொண்டே இருக்கின்றோம். 

எங்களுக்கு போரளிகள் என்றால் எப்பவுமே வியப்பு தான்.எங்கள் மரணம் எங்களுக்கு எப்படி வரும் எனத் தெரியாது.என்றாலும் எங்கள் கண்ணுக்கு முன்னால் நடைபெறும் அவல மரணங்கள் மரணத்தில் தீராத பயத்தை உண்டாக்கிறது.அந்த வகையில் சுகந்தி அக்காவின் மரணம் என் வாழ்கையில் தூங்காத இரவுகளை தந்து கொண்டே இருக்கிறது.

சுகந்தியக்கா ஒரு ஆண் மாதிரி தோட்டத்துக்குள் நின்று முறிவா...அப்போது அவங்களுக்கு ஒரு பதினெட்டு வயதிருக்கும்
அவங்க அப்பாவை ராசு மாமா என்பேன்.அவங்கள் அம்மாவை ராசு மாமி என்பேன்.அவங்களை ஏனோ சுகந்தியக்கா எனத்தான் கூப்பிடுவேன்.
இதுவும் ஒரு இடம் பெயர்வில் நடந்த சம்பவம் தான் சுகந்தியக்கா உரும்பிராயில் இருந்தவா...நாங்கள் மட்டுவிலில் இருந்தனான்.கடைசி நேரத்தில் நாங்கள் எங்கள் துணிமணிகளை எங்க பெரியம்மா வீட்டை கொண்டு வந்து வைச்சிருந்தோம்.பெரியம்மா வீட்டுக்கு முன்னுலேயே சுகந்தியக்கா வீடு இருந்ததது.
ஆமிக்காரன் எங்க ஏரியா புல்லாக வருவதற்க்கு முன்னம் கொஞ்ச உடுப்பும்,கொஞ்சம் சமயல் பாத்திரங்களும் எடுக்கிற ஜடியாவில் நான்,ராசா இருவரும் வீட்டுக்கு அம்மா ஆச்சியாக்களுக்கு சொல்லாமல் மட்டுவிலில் இருந்து வெளிக்கிட்டோம். திடிரென செல்ல அடித்த படியால் எல்லாரும் அந்ததை அந்த இடத்தில் விட்டு ஓடி வந்தவர்கள் தான்.அதனால் எல்லர்ரக்கும் திரும்ப போய் அதி முக்கியமான பொருட்களை எடுக்கிற தேவை இருந்ததது

எல்லா குடும்பமும் இப்படி கொஞ்ச கொஞ்சம் சாமங்களை எடுப்பதற்க்கு வந்து இருந்தார்கள்.அதில் சுகந்தியக்காவின் குடும்பமும் ஒன்று.
நான் வீட்டுக்குள் போய் கொஞ்ச பொருட்களை எடத்துக் உரப்பையில் கட்டிக்கொண்டு இருந்தேன்.
ருhச அவனுடைய கோழி முட்டைகளை எடுக்க எங்க வீட்டு கோடிக்கை போனவன் .
திடிரென ஓடி எந்து “ரவி ஆமியடா”என்று கத்திவிட்டு சுகந்தியக்கா வீட்டு வேலிக்குள்ளாக புகுந்து தன்றை விட்டு வேலிக்குள்ளாலை புகுந்து ஓடத் தொடங்கி விட்டான்.
நான் சுகந்தியக்காவின் வேலிக்குள் புகுந்து விட்டேன்.அனால் ராசா வீட்டுக்குள்ளால் என்னால் புக முடியாது என என்னால் பார்தத உடனே விளங்கி விட்டது.அதனால் நான் சுகந்தியக்கவின் முற்றத்துக்கு ஓடி வந்தேன் சகந்தியக்கா முற்றத்தில் இருந்து கிணத்தக்கள் விடற பெறிய பைப்பை தோளில் தூக்கி கொண்டு நிக்கிறா
சுகந்தியக்கா ஆமியுங்கோ ஓடுங்கோ எனச் சொல்லி விட்டு  நான் அவங்க வீட்டக்க பக்கத்து றோட்டாலை ஓடிக்கொண்டிருந்தேன்..
ஒரு மைல் ஓடியிக்க மாட்டோம் ஆமிக்காரன் செல்லடிக்க தொடங்கி விட்டான் .
இயக்கம் ஏற்கனவே எங்க ஊரில் அங்காங்கு பங்கர் வெட்டி வைச்சுருதவங்கள்
செல்லு குத்துற நேரத்தில் பங்கருக்குள் படுத்து விட்டு அந்த செல்லு வெடித்த உடன் ஒடிபோய் நாங்கள் அடுத்த பங்கருக்குள் போகிற நேரத்தில் அடுத்த செல்லு குத்துற ரைம் சரியாக இருக்கும்.
நூன் ஒரு பங்கரக்குள் போய் படுத்த விட்டேன் சரியாக அந்த நேரத்தில் சகந்தியக்கா முன்னால் ஓடி; போய்க்கொண்டிருந்தா.
நான் கத்தினேன் சுகந்தியக்கா செல்லு குத்திட்டான் படுங்கோ படுங்கோ என...
சுகந்தியக்கா என்னை திரம்பி பார்த்தா
ஆவங்கள் கையில் கிணத்து பம்பு சுற்றிய வயைத்தின் நடுத் தடி இருக்கிறது.
ஆவங்கள் அந்த நிமிசத்தில் அந்த தண்ணீர் பம்புவோடு எப்படி பங்கருக்குள் குதிக்கிது என யோசித்தவோ...அல்லது செல்லு தூரத்தில் தான் விழுகிறது என நினைத்தாவோ?
ஆவங்க மனசில் என்ன நினைத்தாய்கள் எனத் தெரியவில்லை.
செல்லு விழ விழ அவங்கள் ஓடிக்கொண்டே இருந்தாங்கள்.
ஏன் பங்கருக்குள் இருந்து ஒரு முப்பது மீற்றர் போய் இருக்க மாட்டங்கள்.

ஆவங்கள் சளாரென பைப்பை போட்டு விட்டு படுத்து விட்டாங்கள்.
நான் அப்படி தான் நினைத்தேன்.
குத்தின செல்லு எல்லாம் விழுந்து விட்டத என்ற என்னுடைய கணக்கின் படி நான் இன்னும் 100 மீற்றருக்க அப்பால் அடுத்த பங்கருக்கு ஓடுறத்துக்கு ரெடியாகி ஓடிக்கொண்டிருந்தேன்.
ஓடிய படி நான் சுகந்தியக்கா படுத்து இடத்துக்கு வந்து விட்டேன்
சுகந்தியக்கா தலையால் இரத்தம் வடிந்து சீறிக்கொண்டிருந்துதது.
அது கிட்டதட்ட ஊசிக்குழாயால் பிரிட்டு கொண்டு வந்ததுது போல இருந்தது
அவங்கள் திணறிக் கொண்டிருந்தாங்கள்.அவங்கள் முகம் எல்லாம் மண்; தூசி
அவங்கள் முடியாமையால் ஒற்றைக்கையால் புல்லை இறுக இழுத்துக்கொண்டிருந்தா
அவங்கள் மூச்சு விட கஸ்டப்பட்டு கொண்டிருந்தாங்கள்.
மிக மெதுவாக சுத்தும் பம்பரம் போல சுகந்தியக்கா கண் முழி ஓடிக்கொண்டிருந்தது

இதை பார்த்து விட்டும் நான் என்னூயிரை காப்பாற்ற ஓடிக்கொண்டே இருந்தேன்.
அவங்கள் கடைசி நமிடங்கள் இப்பவும் என் கண் முன்னால் ஒடிக்கொண்டே இருக்கிறது.
நூன் இதை எழுதும் போது யோசிக்கின்றேன்.
சுகந்தியக்கா அந்த கடைசி நிமிடத்தில் என்னை அடையாளம் கண்டு இருப்பாங்களா?
தூன் சாகப்போறது அவாக்கு தெரிஞ்சு இருக்குமா?
ஆந்த கடைசி நிமிடத்தில் என்னிடம் ஏதாவது உதவி எதிர் பார்த்து இருப்பாங்களா?
நூன் அந்த நிமிடத்தில் சுகந்தியக்கவுக்கு உதவி பண்ணியிருக்க முடியுமா?

ஒரு உயிர் போறதை பக்கத்தில் இருந்து பாக்காதீர்கள். அந்த நிகழ்வு காலம் பூராய் எங்கள் நினைவு கனவு எல்லாத்திலும் வந்து துரத்தும்.

அது ஒரு  கொடுமை
(தொடரும் மரண சாட்சி.........)




;

கன்னிமார் கோயிலடியும் நாங்களும்

காலம் பூராய் துரத்திக்கொண்டு இருக்கிற இனிமையான நினைவுகளில் கன்னீமார் கோயில் ஒன்று.கன்னிமார் என்பது ஒரு குல தெய்வம் என்ற ஒன்றக் சொல்லுக்குள்ளே என்னால் கடசிவரை அடக்க முடியாது.கன்னிமார் என்பது தாயக,நண்பியாக ,நண்பணாக,மற்றும் ஒரு ஜீரோ என சகல பாத்திரத்துக்கும் அடங்கி நிற்க்கும் ஒரு தெய்வம்.என்னுடைய மண்வாசனையே அங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது.
கன்னீமார் கோயிலை சுத்திதான் எமது விளையாட்டுக்களே ஆரம்பித்தது.எனக்கு தெரிந்த முதல் ஞாபகம் குமார் அண்ணா பஞ்சண்ணா நடத்திய விளையாட்டு போட்டி.கிளியக்கவின் குமார் அண்ணா,மகேசக்காவின் பஞ்சண்ணா,மோகண்ணா,உலகநாதண்ணா,யோகமக்கவின் சிவாண்ணா,அப்பண்ணா, மட்டுவில் குமாரண்ணா என அந்த நேரத்து இளந்தாரிகள் கடைசியாக ஒரு விளையாட்டு போட்டி வைத்தார்கள்.பிறகு ஒவ்வொருவராக வெளிநாடு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆதற்க்கு பிறகு நாதன் மாமா நித்தியண்ணா ஆட்கள் கன்னிமாரில் உள்ள வாசிகசாலையில நாடகங்கள் போட தொடங்கினார்கள்.ஒவ்வொரு சிவராத்திரியும் களை கட்டும்.
எனக்கு ஞாபகம் சிரிக்கும் சிலைகள் நாகடகம்.அதை விட கல்பணாக்கா,தயாக்கா,யமுணாக்க,கூட சில நாடகத்தில் நடித்த ஞாபகம்.சிவ ராத்திரி..என்பது அவ்வளவு சாதரணமாக நாளாக போகது ..அண்ணைக்கு ரொம்ப சாதரணமாக ஊருலை இருக்கற தெண்னையில் எல்லாம் கள்ள இளநீர் பறிச்சு குடிப்போம்.நான் இருந்த காலம் வரைக்கும் இளநீர் பிடுங்கி விட்டான் என்று யாரும் யாருடமும் முறையீடு செய்தது இல்லை.சிவராத்திரியில் நிச்சியமாக குப்பிழானில் இரண்டு காதல் ஜோடியாவது ஓடி விடும்.
கன்னிமார் கோயிலை சுத்தி மாலையில் ஒரே விளையாட்டுத்தான்.கிட்டியடி,போலையடி,யாட்டு விளையாட்டு.வருசம் பூராய் நடக்கும்.
எனக்கு பதினாறு வயது வரைக்கும் அங்கே தான் இருந்தேன். கோயிலில் ஒரு பொங்கலை நாங்கள் தவற விட்டது இல்லை.யாரவது பொங்கினால் அந்த ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்து விடுவோம்.பூசையெல்லாம் முடிய அப்படியே எல்லோரும் வரிசையில் இருப்போம்.ஆறு மீற்றர் நீளத்துக்கு கிட்டத்தட்ட ஆறு வரிசை இருக்கும்.அதை விட இருக்க இடம் இல்லாவர்கள் கொஞ்ச பேர் நின்று பொங்கல் வேண்டுவார்கள்.பெரும்பாலும் உவ்வொரு வெள்ளீயும் பொங்கல் நடக்கும் என நினைக்கின்றேன்.அதோடு கோயிலுக்கு கொடுக்கிற இளநீர் தேங்காய்க்கு நாங்கள் அடிபடுவோம்.அது அலாதியான சந்தோசம்.எங்க கன்னிமார் கோயிலடியில் இருந்து பார்த்தல் வீரமனை சகல பக்கமும் தெரியும்.நானும் தாசண்ணாவும் இன்னொரு படி போய் பககத்தில் உள்ள வேப்ப மர உச்சியில் எறி வேப்பம் பழம் சாப்பிட்டுக்கொண்டே இன்னும் அதிகமாக எங்க ஊரை கண்காணிப்போம்.அதில் ஒரு அலாதியான சந்தோசம் இருந்தது.
இதை விட முக்கியமாக நாங்க வளர வளர படம் பார்கின்ற ஆசையும் வளர்தது.ஊரில் இருக்கிற எல்லாரிடமும் ஒரு கிளிஞ்ச கொப்பியலில் பெயர் எழுதி காசு கேட்போம்.முந்தி கரண்ட இல்லாத படியால் ஜெனேற்றர் தான் அதனால் காசு தர முடியாதவர்கள் மண்ணெண்ணை தருமாறு கேட்போம்.அனைகமாக ஆட்கள் பணம் தருவார்கள்.சில வேளை ஏசி கலைச்சு விடுவார்கள். நான் நினைக்pன்றேன் அப்ப ஆயிரம் ரூபாய் ரீவி,டெக்,ஜெனேற்றர்,அதோடு நாழு பட கொப்பியும் கொண்டு வருவார்கள்.எப்படியும் ஆயிரம் ரூபாய் சேராது.நானுறு ரூபாய் கிட்டதட்ட குறையும் .ஜிம்மி அக்காவிடம் போய் அழுகிற மாதிரி கதைச்ச எட்டுதிட்டி மாயம் கொட்டாதே என சொல்லி விட்டு மிச்ச காசு எல்லாம் தருவா...
சிவராத்திரிக்கு இப்படித்தான் காசு சேர்த்து; ரீவிக்கு சொல்லி காசையும் கொடுத்து விட்டோம்.அவரும் சரியாய் ஆறு மணிக்கு ரீவி எல்லாத்தையும் கொண்ட வந்து போட்டால் ரீவி வேலை செய்ய வில்லை.முந்தி ரீவியோடு நாலஞ்சு பொடிகாட்டும் வருவினம்.ரீவிக்கு ஒருத்தர்.டெக்குக்கு ஒருத்தர்.ரீமோட்டுக்கு ஒருத்தர்.எல்லாரும் ரீவியை சுத்தி நின்று வேலை செய்தும் ரீவி வோர்க் பண்ணவில்லை.அப்படியே ரீவியை விட்டு விட்டு அடுத்த நாள் வாரேம் என பொடிக்காடுகளை விட்டு விடடு ரீவி முதலாலி போய்விட்டார்.நானும் ரூபண்ணாவும் மெல்ல ரீவியுடைய மேலே போர்தியிருந்த துணியை விலக்கி பார்தால் கார்ட் போரட் பெட்டியில் ரீவியினுடைய முன் கண்ணாடியை செருகி ரீவி போல செய்து கொண்டு வந்து இருக்கினம்
ஏன் என்றால் சிவராத்திரிக்கு எல்லா கோயிலிலும் ரீவி ஓடர் எடுப்பாங்கள்.ரீவி முதலாலியடம் வேறு ரீ வி இல்லை.அதனால் நாங்கள் சின்னபொடியல் தானே என எமாத்துவோம் என கொண்டு வந்தார்கள்
பேந்து அடுத்த நாள் படம் போட்டு காட்டினார்கள அது வேறை விசயம்;.
முந்தி கன்னீமார் கோயில் எப்போதும் களைகட்டிய படியே இருக்கும்.நான் லண்டணை விட்டு ஊருக்கு போய் இருந்த சமயம் கன்னீமார் கோயிலை நல்ல பெரிசாக கட்டி இருந்தார்கள்.என்றாலும் முந்தி இருந்து சந்தோசம் இப்ப இல்லை மாதிரி எனக்கு பட்டது.கோயிலில் பொங்கி கொண்டு சனத்தை பார்தால் சனமே இல்லை...என்னம்மா யாரையும் காணவில்லை என அம்மாவிடம் கேட்டேன்.
நான் போய் எல்லருக்கும் சொல்லி போட்டு வாரேன் என்று அம்மா சொன்னா
ஏனம்மா கோயிலில் பொங்கினால் ஆட்களுக்கு சொல்லனும் எனக் கேட்டேன்
அது அப்படி தான்ட என அம்மா சொன்ன
முந்தி எல்லாம் அப்படி இல்லையே என நான் கேட்டேன்
முந்திய மாதிரி இப்ப இல்லையட என அம்மா சொன்ன...
அந்த வார்த்தையை கேட்டவுடன் எனக்கும் இந்த சமுதாயத்துக்கும் இடையில் ஏதோ நூல் பட்டென்று அறுந்தது போல இருந்தது.

முந்தி ரொம்ப கஸ்டம் எங்க ஊரிலே ஆனால் எல்லோரும் ரொம்ப சந்தோசமாக இருந்தோம்
முந்திய மாதிரி இல்லை என்ற அம்மாவின் கருத்தின் எதிர் பக்கம்
முந்திய மாதிரி கஸ்டமும் இல்லை அதே நேரம் முந்தைய மாதிரி சந்தோசமும் இல்லை
என்பது தானே

தொடரும்

வேலாயுதம் மாஸ்ரர்.

  இன்னைக்கு விஐய் ரீவியில் சாட்டை படம் பார்த்தேன.; மறக்க முடியாத ஆசிரியர்கள் நிழல் போல் வாழ்க்கை எல்லாம் வந்த கொண்டு இருப்பார்கள்.அவர்கள் கட்டாயமாக ஒவ்வொரு மாணவனின் வாழ்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள்.
எமது பாடசாலையான குப்பிழான் விக்கினேஸ்வரவுக்கு தலைமை ஆசிரியாராக இருக்கும் வரை தன்னை வருத்தி உழைத்தவர் வேலாயுதம் மாஸ்ரர்.
ஒர் தவிர்கமுடியாத காலகட்டத்தில் விக்கினேஸவரா பாடசாலை தன்னை தானே அழித்துக் கொண்டு இருந்தது. தொண்ணூற்றி ஓன்றாம் (1991)ஆண்டு யாழ்பாணத்தில் குரும்பசிட்டி,உறங்குணை, வரை இலங்கை இராணுவம் கைப்பற்றிய போது எமது பாடசாலை மயிலங்காட்டில் உள்ள சிறி முருகன் பாடசாலையில் ஒரு இடம் கேட்டு ஒதுங்கி காலையில் சிறி முருகன் பாடசாலையும் விக்கினேஸ்வர மாலையிலும் பாடசாலை நடத்தி கொண்டு இருந்தார்கள்.அந்த நேரத்தில் எமது பாடசாலையில் அதிபர் என்று யாரோ இருந்தார். நாங்கள் அவரை கண்ணால் கூட கண்டதில்லை.
அப்போது எமது விக்கினேஸ்வர பாடசாலையில் மாணவர்களைவிட பெற்றோர்களின் கியு அதிகமாக இருக்கும்.அது பிள்ளைகளை இன்னொரு பாடசாலைக்கு மாற்ற படையெடுக்கும் பெற்றோர்கள்.பெரும்பாலும் வசாவிளான் பள்ளிக்குடத்துக்கே அந்த பிள்ளைகள் மாற்றப்பட்டார்கள்.அது ஒரு மோகம் மட்டுமல்ல அங்கு படிப்பிக்கிற ஆசிரியர்களே தம் பிள்ளைகளை இன்னொரு பள்ளிக்குடத்துக்கு அனுப்பும் போது மற்ற பிள்ளைகளின் தாய் தகப்பனை குற்றம் சொல்ல முடியாது. பெரும்பாலும் விக்கினேஸ்வர பாடசாலையில் படிப்பித்த ஆசிரியர்கள் குப்பிழானை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.அவர்கள் தம் பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு மாற்றக் காரணம் தாம் படிப்பிக்கின்ற முறையில் தமக்கே நம்பிக்கை இல்லாமை இருந்து இருக்கலாம் என்பது என் வலுவான நம்பிக்கை.சில வேளை சேட்பிக்கர் தர மறுத்த ஆசிரியரோடு பெற்றோர்கள் மேற் கூறப்பட்ட காரணத்தை கூறி சண்டை பிடித்ததையும் நான் கவனித்தேன்.இன்னொரு படி போய் சேட்பிக்கர் தர மறுத்த போது உண்ணவிரதம் இருந்த பெற்றேரையும் நான் அறிவேன்.
போர்,சனத்தொகை குறைவு,தளபாட தட்டுப்பாடு,சரியான பாடசாலை அமையாமை இதோடு மாணவ பற்றக்குறை போன்ற காரணத்ததால் குப்பிழான் விக்கினேஸ்வர நலிந்த கொண்டு வந்த காலம் அது.அப்போது நான் எட்டாம் ஆண்டு படித்தேன்.எனக்கு நல்ல ஞாபகம் .ஒரு 180 மாணவர்கள் தான் அப்போது படித்தார்கள்.இதில் முசுப்பாத்தி என்னவென்றால் ஐந்தாம் வகுப்பு வரை 150 மாணவர்களும் 5 வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை 30 மாணவர்கள் தான்.அந்த சமயத்தில் தான் ஏழாலை மத்திய மாகா வித்தியாலயம் குப்பிழான் பாடசாலையை நிறுத்தி விட்டு ஏழாலை கொத்தணியோடு சேர்ப்பதற்றகான ஏற்பாட்டில் இரங்கியது.
அந்த நேரத்தில் தான் வந்தார் வேலாயுதம்; மாஸ்ரர் எங்கள் பாடசாலை அதிபாராக......
அவர் வந்த ஒரு கிழமையிலேயே ஒர பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்ததது.கொத்தணி பாடசலையில் இருந்து தற்காலிகமா குப்பிழான் பாடசாலையை நிறுத்துவதற்க்கான அடிப்படையில் பேசுவதற்க்கு ஒருத்தர் வந்தார் .
அது எப்படி சாத்தியம்,இப்ப இருக்கிற மாணவர்களை என்ன செய்வது? என வேலாயுதம் மாஸ்ரர் கேட்டார்.
மாணவர்கள் விரும்புகின்ற பாடசாலையில் அவர்களை சேர்க்கலாம்.அதிபர்,ஆசிரியர் ஒரு கடிதம் எழுதி தந்தால் அது சாத்தியம் என வந்தவர் சொன்னார்
அப்படி எல்லாம் எங்களால் கடிதம் எழுதி தர முடியாது.
அப்படி இல்லை உங்களுக்கு ஒரு பாடசாலை இல்லை சிறிமுருகன் பாடசாலையில் நீங்கள் மாலையில் நடத்தவது அவர்களுக்கு கஸ்டம் சிறி முருகன் பாடசாலை பாதிக்கபடுகின்றது.
என்பத அவரிகளின் வாதம்.
பரவாய் இல்லை இன்னும் 15 நாளில் நாங்கள் சிறி முருகன் பாடசாலையை விட்டு எமக்கு ஒரு பாடசாலையை உருவாக்கின்றோம்.என வேலாயுதம் மாஸ்ரர் சொன்னார்
உங்களுக்கு இன்னொரு பாடசாலை கட்டுவதற்க்கு பணம் ஒதுக்கிறளவுக்கு கொத்தனியிடம் வசதி இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது.அந்த வாதம் ஓரளவுக்கு உண்மை


அப்படியென்றால் அந்த பிரச்சனையை நாங்கள் பார்க்கின்றோம்.என்று வேலாயுதம் மாஸ்ரர் கூறி விட்டார்.
மேலே கூறப்பட்ட உரையாடல்ளை எங்களுக்கு சொன்னது கண்ணா ரீச்சர்.இந்த இடத்தில் கண்ணா ரீச்சரை பற்றி சொல்லணும்.கண்ணா ரீச்சருக்கு குப்பிழான் பாடசாலையில் ஆதித பிரியம்.ஒவ்வொரு மாணவர்களையும் கண்ணா ரீச்சர் நேசித்தாங்கள்.பதினொன்றாம் வகுப்பு வரை நான் அவங்களிடம் தான் படித்;தேன்.நானும் யோசித்து பார்ப்பேன் கண்ணா ரீச்சார் படிப்பித்த காலத்தில் ஒரு நாள் கூட ஒரு சின்ன வார்த்தை கூட மாணவர்களையோ அல்லது மற்றவர்களையோ புண்படுகிற மாதிரி அவங்கள் பேசி பார்க்கவில்லை.எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்குகிடைத்தது. இடம் பெயர்ந்த காலத்தில் நெடுங்கேணி மாகா வித்தியாலத்தில் நான் உயர்தரம் படிக்கும் போதும் கண்ணா ரீச்சர் அங்கே ரீச்சராக இருந்தாங்கள்.
புதினைந்த நாளில் புதிசாக பாடசாலை உருவாக்கின்றோம் என வேலாயுதம் மாஸ்ரர் சொன்னாலும் சொன்னார் அதற்க்கா அவர் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமல்லர்.குப்பிழானிலேயே ஒரு வீட்டை பிடித்தார்.அது பொன்மணிக்காவின் வீடு.அப்புறம் மாணவர்களை கொண்டு குப்பிழானையும் குப்பிழானை சுற்றியும் காசு சேர்த்தார்.அடுத்த சுற்றாக ஊரில் உள்ள கொஞ்சம் பணக்காரிடம் நேரடியாக ஆசிரிய குழுக்களோடு இணைந்து பணம் சேர்த்தார்.பொன்மணிக்கா உடைய காணி முழுவதும் நாழு பெரிய கொட்டில் போட்டு ஓலையாலே மேய்ஞ்சு பாடசாலையை ஆரம்பித்தார்.கூலிக்கு யாரையும் பிடிக்கவில்லை.மாணவர்களும் ஆசிரியருமே அதை செய்தோம்.அவர் பட்ட கஸ்டத்தை பாரத்து பொன்மணிக்கா மீண்டும் தன்னுடைய வீட்டில் பாதியை பாடசாலைக்கு கொடுத்தாங்கள்.அவங்களுக்கு நல்ல மனசு.
மாணவர்கள் வீட்டை போன பின்பும் வேலாயுதம் மாஸ்ரர் கயிறு வெட்டுறதும் ,கிடங்கு வெட்டுறதுமாக அடுத்து நாள் வேலைக்கு முதல் நாளே பிள்ளையார் சுழி போடுவார்.சில வேளை இரவ 12 மணி வரை அவர் வேலை செய்து இரக்கின்றார்.
அந்த வருசமே சம்பந்தன் சக்திதாசன்,இந்துமதி என்ற இரண்டு பிளளைகள்; 5 வகுப்பில் கொலசீப் பாஸ் பண்ண வைத்தார்.படிப்பிக்கிற முறையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தார்.முக்கியமாக காலையில் நியுஸ் பேப்பர் வாசிப்பது.ஒரு நாளை;க்கு ஒவ்வொரு பிள்ளையும் ஐந்து திருக்குறலும்,ஐந்து ஆங்கில வார்த்தையும் கட்டாயம் பாடமாக்கணும் எனக் சட்டம் கொண்ட வந்தார்.எந்த நிகழ்விலும் எல்லோரும் பங்கு பெற வைத்தார்.கையெழுத்து பிரதி ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டாய படுத்தினார்.
எங்களோடு ரொம்ப பிரண்லியாக இருப்பார்.எனக்கு நல்ல ஞாபகம் ஒரு பேச்சுப்
போட்டிக்காக நான் கலந்த கொண்டேன்.பேச்சுப்போட்டீக்கு போட என்னிடம் சப்பாத்து இல்லை.அவரே எனக்கு சப்பாத்து வேண்டி தந்து அன்றைக்கு சப்பாத்து எப்படி போட்டு நடப்பது என மைதானத்தில் கூட்டிக்கொண்டு போய் பழக்கினார். ஓரு 10 வருடத்துக்கு பிறகு அவருடைய ரைமில் தான் குப்பிழான் பாடசாலையில் இருந்து உயர்தரம் படிக்க போதுமான புள்ளி மாணவர்கள் பெற்றார்கள்.
மறக்க முடியாத ஆசிரியர்கள் நிழல் போல் வாழ்க்கை எல்லாம் வந்த கொண்டு இருப்பார்கள்.அவர்கள் கட்டாயமாக ஒவ்வொரு மாணவனின் வாழ்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள்.என்னால் வேலாயுதம் மாஸ்ரரை என் ஆயுளில் மறக்க முடியாது.நான் அவருக்க நிறைய நன்றி கடன் பட்டுள்ளேன்

அழகிய மனைவியும் அழகற்ற காலை பொழுதும்

           அழகிய மனைவியும் அழகற்ற காலை      பொழுதும்


ஓவ்வொரு புருசனுக்கும் பொண்டாட்டி கோபத்தில் இருக்கும் போது மனசு குழப்பத்தில் போய்விடும் இவள் தன்னுடைய எந்த குற்றத்ததை கண்டுபிடித்து விட்டாள் என.பிறகு ஏதோ அப்படி இப்படி தஐh பண்ணி அறிஞ்சா அது ஒரு சப்பை மேட்டராக இருக்கும்.மெயின் மேட்டர் பற்றி ஒரு துளி கூட அவங்களுக்கு தெரிந்து இருக்காது.
உண்மையாக மனைவி கோபத்தில் இருக்கிறாளா?இல்லை சாதரணமாகவே அப்படி தான் இருக்கிறாங்களா? என அறியவே அதிகமான ரைம் போய் விடும்.
நூறு வீதம் கோபத்தில் தான் இருக்கிறாங்கள் என அறிய கூடிய சத்தர்ப்பம் ரெடிமேட் தோசை அதாவது மாவைக்கரைத்து தோசைத்தட்டிலே போட்டு வைத்தாலோ அல்லது உப்பு மா கிண்டி வைத்தலோ தெரியும் ஆள் போபத்தில தான் இருக்கின்றா என்று.
ஆனால் எந்த குணத்திலே இருக்கிற என அறிய முடியா தருணம் காலை நேரம் தான்
நித்திரை கலைந்து தலையை நீட்டி ஒரு ரீ கேட்போம் என தலையை தூக்கினால் சளரென முதுகிலே அடி விழுவது போல பிள்ளைகளிடம் ரீவி ரிமோட்டை ஆக்கிரரோசமாக பறித்து கட்டிலில் எறிவது தெரியும்
பிள்ளைகளோ காலை கையை உதறி ரிமோட் வேணும் என அழுவார்கள்.
இந்த நேரத்தில்
ரீ கேட்போமா ?வேண்டாமா? ஏன ஒரு தர்ம போரட்டமே நடக்கும்.கருமம் பிடித்த அந்த ரீயை எந்த கருமம் பிடித்தவன்; கண்டுபிடித்தான் என முகம் தெரியாத ஒரு குழுவிடம் கோபமே வரும் ஆனல் அந்த ரீயை மோர்னீங்கில் குடிக்க விட்டால் அன்று முழுவதும் ஒரு தூக்குத்தண்டனை கைதி போல அலைய வேணும் ஆபிசில் நுளையும் போதே ஏதோ nஐயிலுக்கை போற பீல் தான் இருக்கும்
காலையில் பெண்கள் கோபமாக இருப்பதற்க்கு ஆயிரம் காரணம் அதில் முக்கியமான காரணம் அவங்கள் எல்லாம் மோர்னிங் 5 மணிக்கு டாண் என எழும்பி டிங் டிங் என வேலை செய்ய நாங்க மட்டும் எட்டு மணிக்கு மேலையும் ஆமைபோல போர்வைக்குள் தலையை வைத்து இருப்பது மிக முக்கியமான காரணம்.இன்னும் தொள்ளயிரத்து தொண்ணுற்றி ஒன்பது காரணங்களில் நல்ல படிச்ச பெரிய பெரிய விஞ்ஞானிகள் அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஏழட்டு காரணம் மட்டும் தான் கண்டுபிடித்து இருப்பார்கள் மற்ற காரணம் எல்லாம் தங்கமலை இரகசியம் போல இன்னும் கண்டு பிடிக்காமலே இருக்கின்றது.
ஆனால் இந்த தத்துவ விசரங்களுக்கு எல்லாம் ஒரு ரீ கிடைக்காது.ரீ கிடைக்க வேணும் என்றால் மொகத்தை ரொம்ப அப்பாவியாக வைத்துக்கொண்டு வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல மனிசியை பார்கணும்.ஆனால் ஆனால் அவர்கள் எங்களை பார்த்து இருப்பாங்கள்.ஆனால் நாங்கள் பள்ளி எழுந்து விட்டோம் என்று தெரியாத மாதிரியே ஒரு ஆக்ரிவேசன் நடக்கும்.
“டேய் சத்தம் போடதீங்கடா அப்பா நித்திரையல்லாவா” என்று ஒரு வித்தியாசமான குரலில் பேசுவாங்கள்.
நான் 100வீதம் அடிச்சு சொல்லுவினுங்கோ
இந்த பொண்டாட்டடிகளிடம் 1000 சொச்சம் சிவாஜி கணேசன் ஒளிச்சு இருக்கிறாங்கள்.இது ஒவ்வொரு கணவன் மாருடைய மனச்சாட்சிக்கும் தெரியும்.
இவ்வளவு சல்லடைகளுக்கும் பிறகும் ரீ கேட்கிறத்துக்கு ஒரு ரெக்கிணிகல் இருக்கு.மனிசி கொஞ்சம் பிள்ளைகளோடு கொஞ்சி பேசுகிற மாதிரி சத்தம் வந்தால்
அது தான் ரைம் தவற விடதே என உள் மனம் எச்சரிக்கும்.
என்றாலும் உள்ளே இருந்து திணறிய மனசு வார்த்தையை வெளியே கொண்டு வர முன்பு சின்ன இருமலை அல்லது ஒரு செருமலை கொண்டு வரும்அதனுடைய அர்த்தம் கூட
“இந்த நேரத்தில் நான் கேட்பது தவறு தான் என் பாவங்களை மன்னித்து எனக்கு ஒரு ரீ தந்து உதவுங்கள்” என்ற தொனி தான்.
எப்பவுமே அந்த இருமல் தான் அவங்களை கோபப் படுத்துதோ தெரியவில்லை.
பொல பொல எனக் பாத்திரங்கள் கொட்டுவது போல ஒரு சத்தம் வரும்
எமது கருணை மனுவை நிரகரித்த ஜனதிபதியின் புன்சிரிப்புப் போல அந்த சத்தம் எனக்குப்படும்
இவ்வளவு அவமாங்களுக்கு பின்னாலும் ஒரு ரீ குடிக்கனுமா என்ற தத்துவ விசாரங்கள் பழையபடி எமக்கு தோணும் .
“என்னுடைய பொண்டாட்டி நல்லவங்களா கெட்டவங்களா” என்ற ஒரு மனப்போரட்டமே நடக்கும் என்னுடை அபிப்பிராய படி இந்த நேர விசாரணை தான் பல பேரை சாமியராக்கி இருக்கிறது
அது என்னவோ தெரியாது என்ன மாயமோ தெரியாது காலையில் பொண்டாட்டி தார ரீ யுக்கு ஒரு எனோர்ஐp இருக்கின்றது .சில வேளை ரொம்ப கஸ்டப்பட்டு மன அழுத்ததுக்கு பிறகு கிடைக்கிற பானம் என்ற படியால் அதற்க்கு அந்த மவுசோ தெரியவில்லை

ராணி காமிக்ஸ்

ராணி காமிக்ஸ்


சின்ன வயதை சுவரசியப்படுத்தியதில் ராணி காமிக்ஸ் புத்தகம் நிறைய பங்கு ஆற்றியது.அந்த புத்தகதின் வாசம் இன்னும் மூக்கை விட்டு நகரவில்லை.படிக்கும் போதே ஒரு கற்பனை உலகத்தில் நான் ஓடி போய் விடுவேன்.அந்த உலகத்தில் நான் தான் ராஜா.
ாணி காமிக்ஸ் புத்தாகத்தை எனக்கு அறிமுகப் படுத்தியது ஞானன் என்ற நண்பன்.அந்த வயதில் அவன் எனக்கு அரசனாக இருந்தான்.ஒரு நாளைக்கு ஒரு புத்தாகம் தான் தருவான்.இரவு முழுக்க எப்போது விடியும் என பார்பேன்.பாடசாலை போகும் போது அவன் வீட்டை போய் படித்த புத்தகதை;தை கொடுத்து விட்டு புது புத்தாகம் வேண்டுவேன்.புது புத்தாகத்தை கையில் வேண்டும் போது நெஞ்சில் ஒரு குளிர்ச்சி வரும்.என் வாழ்க்கையில் எத்தனையோ வாய்ப்புக்ள் சந்தோசங்கள் எனக்கு கிடைத்தது.அனால் அந்த நிமிடம் கொடுத்த சந்தோசம் போல என எதுவும் இல்லை.
நல்ல நண்பரக்ளை எனக்கு ராணிக்காமிக்ஸ் கொடுத்தது.இன்றை வரைக்கும் அந்த நண்பர்களை நான் தேடுகின்றேன்.என் நண்பண் ஞானனை ரொம்ப கஸ்டப்பட்டு இதே குயஉநடிழழம கண்டுபிடித்தேன்.நான் அவனுக்கு ஒரு பழைய ஞாபகத்தை சொல்லி என்னைத் தெரியுமா எனக் கேட்டேன்.என்றாலும் அவன் என்னைத் தெரியாது மன்னிக்னும் எனக் கூறி விட்டான் .ஒரு 10 நாளாக எனக்கு ஏதோ பெரிதாக இழந்த கவலை ஏற்ப்பட்டது.இன்றைய ஈழத்துகாரர் உள்ள மேலைத்தேயம்,பொருளாதார எற்ற இறக்கங்கள் சிந்தனையில் அவன் என்னைத் தெரியாது என சொல்லி விட்டானோ என நான் கவலைப்பட்டேன்.அவனுக்கு என்னை ஞாபகப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எனக்கும் அவனுக்கும் ராணிக் காமிக்ஸ் என்ற புத்தகம் ஒரு பாலம்,இரத்த உறவு என நான் நம்பினேன்.நான் என் ஆயுள் வரைக்கும் அவனோடு நட்புறவை கொண்டு செல்ல இது போதுமானது என்பது என் உளவியல் வாதம்.
இந்த ராணிக்காமிக்ஸ் புத்தாக கொடுக்கல் வாங்கலில் நிறைய நண்பர்களையும் இழந்து இருக்கின்றேன்.வேண்டின புத்தாகத்தை தராதவர்கள் என் தேசத்தேயே தர மறுத்தவராக நான் அந்த வயதில் நினைத்தேன்.
ராணிக்காமிக்ஸ் புத்தாகத்தினால் சண்டை போட்டவரில் முக்கியமானவர் ஒருவர் தாசண்ணா.ராணிக்காமிக்ஸ் புத்தகத்துக்கும் எனக்கும் அவருக்கும் உள்ள உறவு அலாதியாது.இரண்ட பேரும் பங்காக புத்தாகம் சேர்த்தோம் ஏதோ பிரிக்கிற பிரச்சனையில் இரண்டு பேருக்கும் ஏதோ முரண்பாடு என்னவென்று ஞாபகம் இல்லை.ஆனால் பெரிசாக சண்டை போட்டோம்.அதோடு இரண்ட பெரும் கதைக்கமாமல் விட்டு விட்டோம்.லண்டனுக்கு போன கையோடு அவரை தேடி நட்பை புதுப்பித்து கொண்டேன்.அவர் பழைய ஞாபங்களை சொல்லி பேசிக்கொண்டோம்.அதில் அதிகம் பேசப்பட்டது ராணிக்காமிக்ஸ் பற்றி என நினைக்கிறேன்.அவ்வளவுக்கு ராணிக்காமிக்ஸ் வாழ்க்கையில ஒன்றாகி விட்டது.
அப்புறம் என்னை ஸ்கொட்லாண்ட் ஜெயிலில் திருப்பி அனுப்புறத்துக்கு லண்டண் இமிக்கிறசேனால் வைத்திருந்த போது .எனக்கு கோர்ட் இல் வக்கில் வைத்து வாதடி வெளியே எடுப்பதற்க்கான முழுப்பணமும் தாசண்ணா தான் கொடுத்தார்.அதில் முழுப்பணமும் நான் இன்னும் கொடுக்கவில்லை.என்னை நம்பி அவ்வளவு பணத்தை தருவதற்க்கு ராணிக்காமிக்ஸ் தான் அடித்தளம் இட்டது என்பது உண்மை.
இன்றை வரைக்கும் ஏழாலை மாக வித்தியலத்தில் படித்த பிரசாந்தன் என்ற நண்பனை நான் தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன்.யாழ்ப்பாண சந்து பொந்து எல்லாம் ராணிக்கமிக்ஸ் புத்தாகத்துக்காக நாங்கள் அலைந்தோம்.
நான் நினைக்கிறேன் ராணிக்காமிக்ஸ் முதல் புத்தகம் பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்,இரண்டாவது புத்தகம் தப்பி ஓடிய இளவரசி,மூன்றாவது புத்தாகம் அழகியைத் தேடி என இப்படியாக தங்க துப்பாக்கி என்ற ராணிக் காமிக்ஸ் தவிர்த்து வரிசையாக எல்லா புத்தாகமும் என்னிடம் இருந்தது.இது நானும் பிரசாந்தனும் தேடி தேடி வாங்கின புத்தகம் அவனின் சைக்கிலில் தான் அலைஞ்சோம்.கடைசியல் 1996 ஆண்டு கொழும்பில் இருந்து கூட எனக்கு கடிதம் போட்டான்.நெடுங்கேணி இடம் பெயர்வில் நான் அவன் தொடர்பை தவற விட்டு விட்டேன்.
ராணிக்காமிகஸ்க்கு பிறகு ராஜேஸ்க்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர் அடுத்து சாண்டியன்,கல்கி,டேனியல்,செங்கை அழியான் அப்புறம் சுஜாதா,எண்டமுறி, தொடர்ந்து ராமகிருஸ்ணன்,ஜெயமோகன்,சோப சக்தி,; ,அருளினியன் நாஞ்சில நாடன்,முத்துலிங்கம்,கல்யாண் சாகர் நிப்பாணி எனத் தளம் மாறி போனலும் ராணிக்காமிக்ஸ் தந்த புத்துணர்வு மற்ற புத்தாகம் எனக்கு ஊடாக வரவில்லை

ஆமி

                        
   
பால்யம்

ஆமிக்கதைகளில் கழிந்தன..

இரவின் கனவுளில் ஆமிகளின் பாதணி சத்தங்களில் ஓடி ஒளிவது ஒரு பெரிய கஸ்டாமகவே இருந்தது.

கால்களை தூக்கி வீசி தலையை சுவரில் அடித்துவிடுவார்கள்.என்ற பயத்தில் கால்களை மடக்கி போர்வையால் மூடிப் படுத்தேன்

ஒரு இரும்புத் தலையின் கீழ் அவர்கள் முகம்கள் நிழலாக ஒளிந்து இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது.

ஆமிகள் இரவுகளின் சாயலாக நான் கணக்கிட்டு இருந்தேன்

பகல்ளை விட இரவுகள் மிக நீண்டதாகவே எப்பவும் இருந்தது.

இரவுகள் என்னை உற்றுப்பார்கின்றது என்ற பயத்தில்

சாம இரவுகளில் நான் விறைத்து படுத்து இருந்தேன்

ஆமிப் பய இரவுகள்

ஆமியை விட பயங்கரமானவை





எப்பவும் நடுசாமங்களில் எழும்பி அம்மா என்னை இழுத்துக்கொண்டு ஒடுவாங்கள்.அடுத்த தெரு ஓடும் போது ஆச்சி எமக்காக காத்து இருப்பாங்கள் அவங்க கையில் ஒரு கருத்த பாக் இருக்கும்.அம்மா எப்பவும் பாயையும் சுருட்டி கொண்டு வருவா.என்றை தலையில் எப்பவும் சூக்கேஸ் இருக்கும்.கொஞ்ச தூரம் போனல் பெரியம்மா,பெரியப்பா தெய்வத்தான் எங்களுக்கா காத்தக் கொண்டு இருப்பார்கள்.இதெல்லாம் செல்லடிக்கும் நேரத்திலும் கெலிகெப்டர் வந்து குண்டு போடுற நேரத்திலும் சாதரணமாக நடக்கும்.மாதத்தில் எப்படியும் 10 நாள் பரதேசி போல இரவெல்லாம் யாரவது விட்டுக்கு வெளியே முடங்கி படுத்து இருக்கின்றோம்.ஒரு இனம் புரியாத பயம் மனசுக்குள்ளே அடித்துக் கொண்டிருயிருக்கும்.

அடுத்த நாள் விடியவும் வந்து நானும் என் சார்ந்த பையன்களும் கெலி அடித்த இடங்களில் எல்லாம் சன்னக்கோதுகளை தேடி எடுப்போம்.

சன்னக்கோதுகளை வைத்து நாங்கள் போலை போல் அடித்து விளையாடுவோம்.

அப்புறம் நாங்கள் ஆமியும்,இயக்கமும் விளையாடுவோம்



இரவில் நான் ஆமிக்கு ஏன் பயந்தேன் என்று இன்று வரைக்கும் நான் யாருக்கும் சொல்லவில்லை அதன் உண்மை எனக்கு எப்போதோ தெரியும்

அது ஆமி வந்து என்னை சுடடுட்டு அம்மாவை கற்பழித்து விடுவானோ என்ற எண்ணத்தில் ஏற்ப்பட்ட பயம்.