ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

வார்த்தைகள்


        இண்டைக்கு நிறைய வார்த்தைகள் ஏனோ நாகரியம் இல்லை என்று இல்லாமல் போய்விட்டது.அந்த வார்த்தைகளை யாரவது எப்போதவது சொல்லும் போது ஒரு புதுச்சொந்தமும் மரியாதையும் அவர்களுக்குள் இடையில் ஏற்ப்படுகின்றது.எப்பவும் எங்களில் இருந்து தவறிய அந்த வார்த்தைகள் இப்பவும் எங்கள் உடம்பின் ஓரத்தில் ஒளிச்சுக்கொண்டுதூன் இருக்கின்றது.
                                                துரைமாமாக்கு எப்பவும் நாங்கள் வீட்டை போனால் ஏகப்பட்ட குஷி.எதை எமக்கு தரலாம் என வீடு புள்ளாக அலைவார்.கடைசியல் கை மடிப்பிக்குள்ளே இருந்து கிளியப்போற இரண்டு ரூபாய் நோட்டைத் தூக்கித் தருவார்.வள்ளியாச்சி கிளம்ப போற எங்களை எடேய் எப்பனாய் சாப்பிட்டுப் போட என்பா.துரைமாமா குழம்பிடுவார்
என்ன எப்பன்..?உனக்கு பிள்ளைக்கு சாப்பிடு குடுக்க விருப்பம் இல்லை அதுதான் எப்பனாய் சாப்பிடு என்கிறாய் என்று சத்தம் போடத்தொடங்கி விடுவார்
 எணேய் சும்மா சத்தம் போடதணை என்கிற வள்ளியாச்சி தாற சாப்பாடு சப்பிட்டு முடிய எங்களுக்கு
கண் பிதுங்கி விடும்
இந்த எப்பன் என்ற வார்த்தையை எங்க ஊர்ச்சனம் பாவிப்பது எப்பவுமே அதிகமாக சாப்பாட்டு விசயத்தில் தான்
ஒரு நாள் ரூபண்ணவும் குமார் அண்ணாவும் திடும் திடுமென புவனமக்கா வீட்டை போய்விட்டாங்கள்.எல்லோரும் வேலைக்கு போட்டீனம்.அன்னையாச்சி மட்டும் இருந்தாங்க.புவனமக்கா வீட்டை அன்னமுன்ன பழமரம் இருக்கு முதல் நாள் தான் இருவரும் அதிலே பழம் களவாடினவர்கள்.அதை தேவியக்கா ராசுமாமியிட்டை சொல்லி ராசுமாமி நல்ல அடி ரூபண்ணாவுக்கு.அந்த கோபத்தில் போன இரண்டு பேரும் கொடியிலை காய்ச்சு கொண்டிருந்த அன்னையாச்சியின் சாறியை எடுத்து கிளிச்சுக்கொண்டிருச்தாங்கள் அன்னையாச்சி கண்டு வெல வெலத்துப் போனங்கள்
ஏடேய் மோனே உதை எண்ட கிளிக்கிறிங்கள் என்று அழாக்குறையாக கேட்க
கந்தையாண்ரை பொடியனும்,வசந்தவின்ரை பொடியனும் தான் கிளிச்சது என்று உன்ரை பேத்திக்கு சொல்லுங்க என்று வந்துட்டங்கள்.அதற்க்கு பிறகு கொஞ்சக்காலம் இவையள் இரண்டு பேரும் வீரமனை ரவுடியாக உலவியது தனிக்கதை.
பிறகு ஒரு சத்தர்ப்பத்தில் ரூபண்ணாவை நான் இதைப்பற்றி கேட்கும் போது
அன்ணையாச்சி எடேய் மோனே எனக் கூப்பிட்டது இன்றைக்கும் கண்ணுக்குள் ஆடுகிறது என்றார்
அது சரியான பிழையான வேலை என கூறிக்கொண்டார்
மோனே என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரு மலையாள வார்த்தை போல இருந்தாலும் எப்படி எங்கள் மண்ணில் உலவியது எனப் புரியவில்லை.மிகவும் அழகாக அன்பையும்,ஆதங்கத்தையும் இவ் வார்த்தை கொண்டு வரும்.இப்ப இந்த வார்த்தையை பாவிப்பவர் இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது.
குறுக்கால போவன்,கட்டையில் போவன் என்ற வார்த்தையை பெறுப்பாலும் இந்த வார்த்தையை பொயிலை பேரம் முடிந்து போனப்போல பேசுவார்கள்.
குறுக்காலை போவன் இவ்வளவு செலவளித்து விட்டு இருக்கின்றோம் நோவமல் 5000 ரூபாய் கேட்டு போறான்.
கோழித்திருட்டுக்கு பேசுற வார்த்தை கட்டையில் போவன்.நாங்கள் அந்த பக்கத்தில் போகும் போதுதான் பேசுவார்கள்.பேசுறவங்களுக்கு பக்கத்தில் ஐயா பொடியண்ணா சில வேளை நின்று ஓமணை ஓமணை என்று சொல்லிக்கொண்டு நிற்ப்பார் எங்கடை வெள்ளாந்தி சனத்துக்க தெரியாது எங்கன்ரை கோழித்திருட்டுக்கு லீடரே ஐயப்பொடிண்ணா தான்.
ஆச்சிக்கு எப்பவும் ஒரு பழக்கம் இருக்கு உண்ணானை என்று அவங்க சத்தியம் பண்ணினால் அவங்க அந்த சத்தியத்தை மீற மாட்டங்கள்.நான் உண்ணானை என்று ஆச்சியிடம் சத்தியம் கேட்டுவிட்டால்
ஆதைப்பற்றி பிறகு கவலைப்படுவது இல்லை.இன்னைக்கும் உண்ணானை என்று யாரவது சொன்னால்.ஏதோ அவர்கள் உண்மைதான் சொல்லுறார் என முடிவு எடுத்து விடுவேன்
 
சாதரணமாக எங்க ஊரிலே எந்த நடிகரின் பெயரையும் சரியாக உச்சரித்தது இல்லை.
எம்சியார்,சிவாசி,விசயகாந்து,ரசனிக்காந்து,சத்தயராசு,கமலூ(),கடைசியாய் விசய் அது வரைக்கும் அந்த நாட்டில் தான் இருந்தேன்.இப்ப எப்படி என்று தெரியவில்லை அசித்து என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.சாதரணமாகவே ஊரில் சொல்லும் வார்த்தைகள் மிக நெருக்கமாக இதயத்துக்கு பக்கத்தில் இருந்து சொல்வது போல இருக்கும்.நிறைய வார்த்தைகள் இப்படி காணமல் போய்விட்டது வார்த்தை மட்டும் அல்ல பொருட்களும் தான் உதாரணத்துக்கு மூக்கூப்பேணி.
                                எங்கேயாவது இருந்தால் எடுத்து எனக்கும் தாருங்கள்
(ஊண்ணானை-எப்பனாககுறுக்காலை போவன்-உன்ரை விசர்க்கதை-வடிவான பொட்டை-என்ரை ராசா-முசுப்பாத்தி-ஐசே-நடுச்சென்றரில்-உங்காலை-படுவராஸ்கல்-எடே மோனே-அங்கலை-கக்கூஸ்-கட்டையில போவான்-தேத்தண்ணி-முக்கூப்போணி-பொட்டை- சினேதப்பொடியன-ரசனி-சிவசிகனேசன்-எம்சியார்-விசியகாந்து-திண்ணடா-பேந்து………)
 

நீர்வழி


                                    நீர்வழி


அந்த செய்தி எல்லா இடமும் கொண்டுலாத்த பட்டது.
 
வயது போனால் சாகத்தானே வேணும்.....-
 
வளைஞ்சு கால் அகட்டி நடக்கும் அந்த கிழவியா? இழுக்காமல் போய் விட்டது......
மனிசி கடைசி வரைக்கும் தன் வேலையை தானே செய்தது... அண்டைக்கு கூட நல்ல மாதிரித்தான் பேசினது

அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சப் பேர் சேர்ந்துட்டினம். . . பிரேதம் இன்றைக்கு எடுத்து விடுவார்கள்.......?
சல சல என பெண்கள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தார்கள். . . .சாரயம் எடுத்து வந்து கிழவியின் உடம்பெல்லாம் +சினார்கள்.
 
எந்த சலனமும் இல்லாமல் ஒரு ஓரமாய் குந்தியிருந்தார்    சுந்தரம் கிழவன் - வள்ளியாச்சியின் புருசன.;
 
இந்த கிழவனிடம் இருந்து அந்த கிழவி தப்பிவிட்டார்.             என்ன வீராப்பு.  போன கிழமை கூட அடிக்க போய்விட்டார்......
அங்காலை இங்காலை கிழவி போகக்கூடாது..
 
வள்ளி ... வள்ளி என்று உயிரை எடுப்பார்..
 
அந்த நாள் தொடக்கம் இந்த நாள் வரை கிழவிக்கு கஸ்டம் தான். சோத்திலே கொஞ்சம் உப்பு கூடினாலே சுந்தரம் கிழவனுக்கு மூக்கு நுனியில் கோபம் வரும். சுந்தரம் கிழவனுக்கு எண்பது வயசாகிவிட்டது...
எதுவுமே கேட்காது. நல்லாய் காது கேட்கும் .... ஆனால் யார் சொல்வதையும் கேட்பதில்லை என கங்கணம் கட்டி அலைகின்றார்.
 
வெள்ளை கிப்ஸ் சாரம் தான் சுந்தரம் கிழவனுக்கு எப்போதும். இந்த வயதிலும் வள்ளியாச்சி தனக்கு ஏலாட்டிலும் முக்கி முக்கி தோய்ச்சு கிழவனுக்கு வெள்ளே வெளிரென கட்ட கொடுப்பார். வடிவாய் தோச்சு குடுக்காவிட்டால் அடிச்சுடுமோ மனுசன் என்ற பயமாக கூட இருக்கலாம்.
 
இரண்டு ஆண்பிள்ளைகள். ஒரு பெண். மூத்தவன் குடுப்பத்தோடு கொழும்பில் இளையவன் லண்டணில்....
நடுவில் பெடிச்சி தான் விரும்பிவனைக் கட்டி பிள்ளைகளுடன் மருதனாமடத்தில். . ..இளையவன் மனிசி பிள்ளைகளோடுதான் திருச்சியில் கிழவனும் கிழவியும் இருக்கினம். மருமகளோடு கிழவன் பேசுவதில்லை.....
ஏன் என்று கிழவன் யாருக்கும் சொன்னதும் இல்லை..
 
இன்றைக்கு கிழவி செத்துட்டாள்...கிழவன் திமிர் அடங்கி விடும்
நடக்க கூட முடியாத கிழவி .... ஏலாமல் இருந்தால் கூட கக்கூசுக்கு கூட கிழவனுக்கு  தண்ணி எடுத்து வைக்கவேண்டும்.
முந்த நாள் காய்ச்சல் என்று ஆஸ்பத்திரிக்கு போக முன்பும் வள்ளியாச்சி கிழவனுக்கு சமைச்சு வைச்சுட்டுதான் போச்சுது.
 
"" இஞ்சை பாருங்கோ அங்காலை இங்காலை போகதிங்கோ...வந்துடுவேன் சும்மா ஆட்களோடு ஏறிப்பாயதிங்கோ.சாப்பாடு கோப்பைக்குள்ளே போட்டு வைச்சுருக்ககேன் எடுத்து சாப்பிடுங்கோ.பின்னேரத்துக்கள்ளே வந்துடுவேன்''.     கிழவி சொன்னவுடன் கிழவனுக்கு மூக்கிலே கோபம் வந்துவிட்டது. 

 ""மகராணி ஆளப்போறேன் புருசனை கவட்டுக்கை வையுங்கோ''    எப்போதும் பழமொழிதான் கிழவனுக்கு
நக்கல்,நாலந்தர பேச்சு,திமிர்  கிழவிக்கு பழகிவிட்டது
அறுபது வருட குடும்ப வாழ்க்கையை கிழவி எப்படி கொண்டிலுத்ததோ......
கிழவிக்கு எழுபத்தியந்து வயதாம் .... எழுபத்தியஞ்சு வருட அநுபவம் சலனமற்று கிடந்தது.
கிழவன் எங்கேயோ வெறிச்சு பார்த்தபடி இருந்தார்.
 
தனக்காக வழ்ந்தவள் என்று ஒரு சொட்டு கண்ணீர்.....

ம்.........ம். . . சும்மா ஊருக்காவது ஒரு சொட்டு கண்ணீர்...

அப்படி அழுதாலாவது கிழவிக்கு கொஞ்சம் நன்றி கடன் தீர்ப்பது போல இருக்கும்...
 
அவரவர் அவரவகள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.. .  +வரசம் மரம் வெட்டிகயிரோடி..
வெள்ளை வேட்டி கட்டி பந்தல அமைத்து..கதிரை போட்டு வெத்திலை ,பொயிலை சமச்சாரம் வைத்து...
ஒரு மரத்தில் ஒரு கயிறு கட்டி கீழ் நுனியில் நெருப்பு வைச்சு...அந்த நெருப்பை அணைச்சு சுடறாக்கி  பக்கத்தில் சுருட்டு வைத்து....ளி. . .ஒப்பு வைச்சு..... ஐயோ என்று அவரவர் அவர்களை நினைத்து அழுது .....
 
வரமுடியாத பிள்ளைகளுக்காவும் மற்றவர்களுக்கவும் வீடியோ காரனை மருமகள் ஏற்பாடு பண்ணியிருந்தாள்
அவனும் சுற்றி சுற்றி எல்லாறையும் படம்பிடித்தான்.
ழூ
இந்த வரமுடியாத பிள்ளை நான் தான்.
 
இங்கிலாந்துக்கு வந்தும்   மனைவியை கூப்பிட முடியவில்லை.

இலங்கையில் இருந்து   அவளையும் அம்மா ஐயாவையும்;   அழைத்து வந்து  இந்தியாவில் குடிவைத்து விட்டேன்.

இன்று அதிகாலை   தொலைபேசி சிணுங்கியது.

அதிகாலைத் தொலைபேசிகள்       பொதுவாக இழவுச் செய்திகளுடன் வரும். . .அல்லது காசு கேட்டு வரும்.
நல்ல செய்திகள் பொதுவாக நாள் பட்டு வரும். அல்லது   காகிதத்தில் வரும். . .
 
கொஞ்;சம் தயக்கத்துடன்  எடுத்தேன்.
 
மனைவி சிணுங்கினாள்.
 
நான் அசையாது இருந்து விட்டேன்.
 
அம்மாவை ஐயா புத்திசாலியாக எப்போதும் ஏற்றுக்கொண்டது இல்லை. அம்மா புத்திசாலியாக தன்னை காட்டிக் கொண்டதும் இல்லை.           அக்கா எப்போதும் புத்தகமும் கையோடும் தான் அலைவ.. தன் நண்பர்களோடு லக்ஸிமியின் பெண் என்ற நாவலோடு கிலகித்து கொண்டிருந்தாள். ஏதேச்சையாக வந்த அம்மா,         "" இன்றைக்கு யாருமே பெரிதாக கதை எழுதுவது இல்லை தனிமனித புலம்பல்,வெறித்தனம்,விமர்சனத்திற்கு உட்படுத்தல், புரியாமை எழுதுதல்,சமாளித்தல்,கவருதல் இது தானே எழுதுகின்றார்கள்.''  என்றாள்.

    அக்காவுக்கு கோபம் வந்து விட்டது

   ""எழுத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்''? என்ற அக்காவின் கேள்ளவிக்கு அம்மா நிதானமாக தன் சேலைத் தலைப்பால் நெற்றியின் வியர்வையைத் துடைத்தபடி சொன்னாள்.

   ""ஒவ்வொரு காலகட்டங்களிலும் படும் அநுபவங்களின்; சிதறல்களை  புத்தகம் எமக்கு ஞாபகப்படுத்த வேணும்.
எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றால் நாம் போடும் கோலத்தை விட மிக உன்னதம் குறைந்தது தான் அந்த புத்தகம்.''
 
அக்காவின் முகத்தில் தோன்றிய ஆச்சரியக் குறியை       கவனிக்காத மாதிரி, ”        புட்டு ஆறக்கும் முன்னம் சாப்பிடுங்கள் புட்டுக்குள்ளே நெத்தலியும்,வெங்காயமும் தாழித்து போட்டுள்ளேன்என்று விட்டு மீண்டும் குசினிக்குள் நுழைந்தாள்.

  அம்மா எந்த புத்தகமும் படித்து யாரும் பார்க்கவில்லை...                              அம்மாவுக்கு புத்தகம் படிக்கவே நேரம் இல்லை
        அம்மா வெளியே சென்றதை கை விட்டு எண்ணி விடலாம்..
        
  ஆனால் எந்த கடையில் அரிசி மலிவு. . .எந்த தோட்டத்தின் மரக்கறி ருசி. . .      புதிசாய் ஊருக்குள்ளே வந்தவர்களின் குணவியல்பு,பரம்பரை ,சாதி எல்லாம் அத்துப்படி. . . .
 
அம்மாவோடு கோபப்பட்டு எப்போதோ சில நாள் அம்மாவோடு பேசாமல் இருந்ததுண்டு.        ஆனால் இரவு சாப்பாட்டுக்கு முன்னால் அம்மா பேச வைத்துவிடுவாள்
 
      என்ன தலை போகின்ற விடயமாக இருந்தாலும் அம்மாவின் தொடுதல் பேச வைத்துவிடும்.           எல்லோருடைய மௌனத்தின் அர்தமும் அம்மாவுக்கு புரிந்துவிடும்....? அம்மா பேசுவது குறைவு.   ஆனால் அம்மா பேசத்தொடங்கினால் வீடு அமைதியாகி விடும்.            ஆனால் அம்மா மெனமாக சாதித்ததே அதிகம்.
விவரம் தெரிந்த நாள் முதல் அம்மாவை யாரும் மதித்தது கிடையாது
  
வீட்டில் உப்பு இல்லாவிட்டாலும் அம்மாவின் அன்றைய உணவிலும் உப்பிருக்கும்...
 
மதிய நேரம். . .சாப்பாட்டு நேரம்..  அப்பா வருகின்ற நேரம். . .அம்மா அங்கும் இங்கும் ஓடித்திரிந்த..
சரியாக பண்ணிரண்டு மணிக்கு சமையல்ரெடியாகிவிடும்.    சமையல் பிந்தினால் தான் அதிகம் பசிக்கும்
எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அம்மா நிம்மதி இல்லாமல் அலைவார்....ஒவ்வொரு நாளும் என்ன சமைத்தாலும் அம்மாவுக்கு அந்த கவலை இருக்கும்..
 
சரியான கஸ்ட காலத்தில்      வாலைதண்டில் வடிச்ச கஞ்சி முசுட்டை இலை இதை வைத்தே அம்மா ருசியாக சமைப்பார்.

ஒருநாள்       அப்பா வாசலுக்கு வந்தார்.     திடிரென அம்மாவின் முடியை இழுத்து ஓங்கி முகத்திலே குத்திவிட்டார்.

""வாங்கோ சாப்பிடுவோம்...''

பிள்ளைகள் பார்க்கவில்லை என்று தான் அம்மா நினைத்தார். ஆனால்   மூலைலிருந்து பார்த்துவிட்டாச்சு...
அம்மாவுக்கு அவமானமா போய்விட்டது...திரும்ப அம்மாவை வாங்க சாப்பிட என்று கூப்பிட முடியாமல் அழுகையை வார்த்தை தின்றது. ஓடிப்போய் கோடிக்கை நின்று அழுதாள்.அழுகை ஒலி திமிரி திமிரி  கொஞ்சம் வெளியே வந்தது.
 
 அதற்கு பிறகு அம்மா        அப்பாவுக்கு சாப்பாடு போட்டு..தண்ணீர் வைத்து..அடுத்த சோறும் வைத்து...
அடுத்து மாட்டு கன்று ,ஆடு என போய்விட்டார். . .நேரம் கிடைத்த போது அம்மா கட்டாயம் அழுதிருப்பார்..
 
  அப்பா ஏன் அடித்தார்..?    இது எத்தனையாவது தடவை அடிக்கின்றார்?

அம்மா சமைத்த உணவிற்க்கு எப்போதும் யாரும் நன்றி சொன்னது கிடையாது...நன்றாக இருக்கின்றது எனவும் யாரும் சொன்னது கிடையாது...அம்மா எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவரவர் முகத்தை பார்ப்பார்
சாப்பிடும் போது கல் கடிபட்டு துப்பும் போதும்,. . சாப்பிட்ட குறையில் கை அலம்பும் போதும் அம்மாவுக்கு குற்ற உணர்வை உண்டாக்கும்..அன்று முழுவதும் ஏதோ தவறு செய்தது போல அம்மா உலாத்துவாள்.
               
அன்றைக்கு அந்த புட்டுக்குள்ளளே தலை மயிர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அப்பாவிடம் இருந்து அந்தக் கோபம் என்னிடம் எப்படித் தொற்றிக் கொண்டது.     தட்டோடு தூக்கி நிலத்தில் எறிந்தாகிவிட்டாச்சு.

பிள்ளை என்று சொல்லி இதை தந்ததை விட ஒரு துளி விசம் தந்திருக்கலாம்

   அம்மா உடைந்த தட்டையும் சிதறிய புட்டையும் வெறித்து பார்த்தார்.. முகம் வெளிறி போய்விட்டது
        குனிந்து தட்டை பொருக்கிய அம்மா..என்ன நினைத்தாரோ திடிரென தலையில் அடித்து அழத்தொடங்கி விட்டாள்.
 
சின்ன சின்ன அவமானங்கள் அம்மாக்கு. . . அப்பா,நான்,மற்றும் இதர ...
 
 
 யாரின் கோபத்தை அன்று நான் அம்மாக்கு காட்டினேன். எந்த கோபத்தை அம்மாவிடம் காட்டியது
எல்லோருடமும் பைக் இருக்கின்றது என்னிடம் இல்லை என்பதையா...காதலி இன்னொருவனிடம் அதிகம் பேசுவதையா..,?அப்பா ,அக்கா ,நான்,மற்றும் இதற அம்மாவிடம் காட்டும் கோபம் உண்மையில் அம்மாவிடமா....?
அம்மா யாரிடம் காட்டுவாள்.....?
 
நான் பாஸ் ஆனதும் எல்லோரும்    எல்லோரும் எதை எதையோ தந்தார்கள். அம்மா சின்னதாக சிரிப்பை மட்டும் தந்தாள்.   அதுவும் சிறிது சிறிதாக சேர்த்த சிரிப்புத்தான்.
 
அக்கா ஓடிப்போன போது அப்பா அம்மாவுக்கு ஒரே அடி.

ஐயாக்குள் இப்படி ஒரு மிருகம் இருந்ததை நாங்கள் இதுவரை கண்டதில்லை

""அம்மாவின் வளர்ப்பு சரியில்லை''....-''நீதான்டி சேர்த்து விட்டாய்'' என நிறைய தூசன வார்த்தைகள்.
 அப்பா வீட்டை தாண்டி தன் குரல் வெளியே போகுமாறு பேசினார்.    
 
தன் கௌவுரவம் போய்விட்டதாக நாண்டு கொண்டிருந்தார்
 
அம்மா எதுவுமே பேசவில்லை
 
திரும்ப திரும்ப பேசினால் அப்பாவுக்கு கோபம் வரும் இன்னும் கத்துவார் ....எகிறுவார்
 
அந்த பையனை வீட்டை கூட்டி வந்தது அப்பா தான்.    அப்பாவோடுதான் கலகலப்பாக இருப்பான்.
அம்மா அந்த பையனோடு பேசியதே இல்லை..அம்மா முன்பு பல தடவை சொன்னவா..
""பொம்பிளை பிள்ளை இருக்கின்ற வீட்டை அந்த பையனை ஏன் அடிக்கடி கூட்'டி வாரிங்கள்''
""ஆமண்டி உன்ரை கொப்பர் உன்னை வளர்த்த மாதிரியா நான் என்ரை பிள்ளையை வளர்க்கின்றேன்''
 
அம்மா எப்போதும் யதார்தமாக தான் பேசுவார்.
 
இவள் சொல்லி நான் செய்வதா? இது தான் அப்பாவின் அந்தரங்க பிரட்சனை
ஆனால் இன்றைக்கு அம்மா அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. அப்பா அக்காவின் பிரட்சைனைக்கு தான் பொறுப்பில்லாத  எல்லோருக்கும் மாதிரி காட்டிக்கொண்டார். எங்கெங்கு       அம்மா சமாதான கொடியைக் காட்டினவே அங்கெல்வாம்       அது அம்மாவில் கோபத்தை உண்டாக்கியது.
 
அப்புறம் அம்மா அந்த வீட்டை பழைய படி வளைய வளைய வந்தார். அப்பா அம்மா மேலே சொல்லொண்னா கோபத்தோடு இருந்தார். சின்ன சின்ன பிழைபிடித்து முடிந்தளவு ஏசினார்.
 
ஆனால் அம்மா முதல் சோற்றில் இருந்து அடுத்த சோறு வரை அப்பாவுக்கு ஆற வைத்தே கொடுத்தார்
 
   அக்காவுக்கு குழந்தை பிறந்த போது அம்மா தான் பிள்ளை பெத்து பார்த்தது. அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை.தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். அம்மா அதை மதிக்காமல் பிள்ளைபேற்று முடியும் வரை அக்கா வீடே கதியென கிடந்தார்.    அப்பாவால் அம்மாவை அக்கா வீட்டை போவதை நிறுத்த முடியவில்லை.     அம்மா அந்த விடயத்தில் பிடிவாதாமாகவே இருந்தார். அம்மா பிள்ளை பேத்து பார்த்த அந்த நேரத்தில் கூட அக்காவோடு பேசியது கிடையாது
 
அம்மா ஆசைப்பட்ட மாதிரி பிள்ளைகள் நல்ல இடத்துக்கு வந்துவிட்டோம்
இப்ப எல்லாம் ஐயாவின் வேலையைத் தவிர அம்மாவுக்கு வேலை குறைவுதான்..
எனது பிள்ளைகளுக்கு அம்மா நிறைய குட்டிகதைகள் சொல்வதிலே காலம் போனது..
கடல் அலை போல நிறைய கதைகள் அம்மாவிடம்...அம்மா எங்களுக்கு இவ்வளவு கதைகள் சொன்னதாக ஞாபகம் இல்லை..அம்மாவின் கதையில் கம்பிரமான ராஜா குமாரனும்,அழகிய ராஜ குமாரியும் உலாவார்கள்..
அது அம்மாவின் கனவு உலகமாக இருக்கலாம்...
 
          ஐயா இப்பவும் அம்மாவை வேலை காட்டுவது அதிகம் தான்.          ஐயா பொறுத்து கொள்ளுவது ரொம்ப கஸ்டம்.

பிள்ளைகள் பொறுப்பார்கள்...வந்தவர்கள் பொறுப்பார்களா...அப்பா ஏதோ சொல்ல.. எனது மனைவி எதிர்த்து கதைதத்தாச்சு...எவ்வளவு காலம் ஐயா அம்மா கஸ்டப்படுத்துவதை பார்க்க முடியும்...?
 
கட்டன் ரைட்டாக சொன்னாச்சு
 
     ""விரும்பினால் சமாளித்து இருங்கள்''
 
கோபமாக வெறித்த அம்மா ஐயாவின் வேட்டி சட்டையோடு தன் உடையையும் எடுத்து
விறு...விறு என...நடக்க தொடங்கி விட்டார்
எத்தனை தடவை அம்மாவை ஐயா அவமானப்படுத்தி இருப்பார்..
அப்பாவுக்கு  பின்னால் அம்மா போக வேண்டிய அவசியம் என்ன?
திரும்ப திரும்ப ஐயாவடம் மூஞ்சியிலே அடிவாங்க அப்பாவுக்கு என்ன விருப்பமா..?
 
அம்மா இவ்வளவு கோபத்தை இவ்வளவு நாளும் எங்கே வைத்திருந்தார். ஐயாவால்      அம்மாவின் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை
 
பின் நான் தொலைபேசியில் எத்தனையோ கதைத்தும் மன்னிப்புக் கேட்டும் முடியாமல்
 நான் இங்கிருந்து போய்த்தான் அகதி முகாமில் இருந்து வீட்டை கொண்டு வந்து  விட்டன்.
 
இங்கு எனக்கு 1500 பவுன்ட்ஸ் செலவாயிற்று….
 
இப்பஇப்ப…..
 
இருமாதங்களுக்குள் இந்தியாக்கு மீண்டும் போக விசா கிடையாது.
 
யார் கொள்ளி வைப்பது?
 
ஐயா தான் வைக்க வேண்டும்.
 
ழூ

வீடியோகாரனின் கமரா எல்லா இடங்களையும் வளைத்துக் கொண்டு இருந்தது.
 
இதுக்கெல்லாம் தனக்கு தொடர்பு இல்லாத போல கிழவன் எங்கேயோ பார்த்தபடியே இருந்தார்.
 
அந்; கிழவிக்கு பக்கத்தில் போகவே இல்லை.மருமகள் வீடியோகாரனை கொஞ்சம் கண்யாடை செய்தாள்.
வீடியோவும் சும்மா அந்த பக்கம் வீடியோவை திருப்பியது தான். . .    சுள்ளென்று கிழவனுக்கு கோபம் வந்து விட்டது.

ஏண்டா என்னை போட்டோ எடுக்கின்றாய் நானா செத்தேன் வடுவா..... “என்று கிழவன் துள்ளி  போது ஒரு புது சலனம் தோன்றி மின்னலாய் மறைந்தது.

 அதற்கு பிறகு யாருமே சுந்தரம் கிழவனுக்கு பக்கத்தில் போகவில்லை.

""செத்த வீட்டை அசிங்கபட யாருக்கு என்ன தலைவிதி.''  மானம் கெட்ட கிழவன் இடம்,ஏவல்,பொருள் அறியாதவர்.
அந்த கிழவி எப்படித்தான் இவ்வளவு காலமும் காலம் தள்ளினாதோ...முணுமுணுப்புக்கள் ஒப்பாரியாக வந்து தேய்ந்து கொண்டிருந்தது.

கிழவி செத்து விட்டாள் இனி கிழவன் பொல்லாப்பை ஊரோடுதான் முறிப்பார்.
பேச்சுக்கள் ஒப்பாரியை எல்லாம் கிழித்தது.
 
கிரியை செய்ய வேணும் போய்க் குளிச்சுட்டு வாங்கோ
 
கிழவன் எழுந்து வெளியே வந்தார். 

வந்த கிழவனுக்கு வாளியிலே தண்ணி இல்லதது மூக்கிலே கோபம் வந்தது

""சனியன் தண்ணி எடுக்கமல் சாவதற்கு  அப்படி என்னா அவசரம் ''

இனி மருமகள் தான் பாவம் ....

முதியோர் இல்லத்தில் விட வேண்டியதுதான்..

இந்த கிழவனோடு மல்லு கட்ட மருமகளுக்கு என்ன விதியா..?

  கிழவனுக்கு கோபம் குறையவில்லை.அதே கோபத்தோடு கிணத்தடிக்கு போனார்
விறு விறு என தண்ணீயை அள்ளி அள்ளி வாளிளை நிரப்பினார்

ராசத்தி ராணி போனால் ராஐh என்ன கூஐh ஆகிவிடுவேனா...,? சீ... நாயே உன்ரை கோத்திரம் தெரியாதா...?”

கிழவனுக்கு கோபம் அடங்கவில்லை...

இப்படி ஏசி ஏசித்தான் கிழவியை வேலை வாங்கியிருக்கினார்


ஏதோ ஆயுள் எதிரி போல கிழவியின் முகத்தையே பாரமலே சுண்ணம் இடித்து விட்டு தன் கதிரையை
ஆக்கிரமித்தார். என்னா கங்கணம். இவ்வளவு திமிர் மனிசருக்கு ஆகாது.

இவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்த மனிசி
 
ஓரளவுக்கு என்றாலும் மனிசர் அன்பு பாசம் வைக்க வேண்டும்...
 
 
வாய்க்கரிசி போடுபவர்கள் போடுங்கள் அதே வெண்கல குரல்..

குரல் வந்தவுடன் இதற்க்காவே எதிர்பார்த்த மாதிரி கிழவன் விறு விறு என நடந்து சென்று தூரத்தில் எங்கேயோ பார்த்த படி எறிந்தார்.    பின் எழுந்து போனார். அதே வேகத்துடன் திருப்பி வந்தார்.
 
பூதாக்கலச் சோற்றுக்குப் பின் கிழவியின் வாயில்    அன்னம் இடுவது இது தான் இரண்டாம் தடவை.
 
ஒரு நிமிடம் ஒரு செக்கன் கிழவன் அந்த கிழவியின் முகத்தை பார்த்து இருக்கலாம்
 
ஏனோ தானோ என்று... ஏன் இப்படி மனிதருக்குள் ஏன் இந்த குணவியல்பு..யாருக்கும் விளங்கவில்லை
இதை யாருமே கவனத்தில் எடுக்கவில்லை
 
பிரேதம் வீட்டை விட்டு போனல் சரி..
 
இன்னும் பதினைந்து நிமிடத்தில் எடுத்து விடலாம்.
 
எல்லோரும் அவரவர் கடமையை செய்த படி இருந்தார்கள்..
அழுபவர்.....ஒப்பாரி வைப்பவர்கள்
 
கிழவன் தான் கொள்ளிக் குடத்தை  தூக்கிக் கொண்டு சுடரை வரை வர வேண்டும்.
 
பெட்டி மூடப்படும் பொழுது அழு குரல்கள் அதிகமாகின.
 
அனைத்தும் அகதிமுகாமில் இருந்து வந்து போன சொந்தங்கள் தான்.
 
படார் படார் என பெட்டி மேல் அடிக்கும் சத்தம் கேட்டபடியே இருந்தது.
 
அந்த வேளையில் ஒற்றைக் கையால் கொள்ளிக் குடத்தைப் பிடிதஇதுக் கொண்டு மற்றக் கையால் கிழவன் தன் தலையில் அடிக்கிற சத்தம் யாருக்குமே கேட்கவில்லை.